Home நாடு “தமிழ் இடைநிலைப்பள்ளி – வாக்குறுதி நிறைவேறுமா?” டி.மோகன் கேள்வி

“தமிழ் இடைநிலைப்பள்ளி – வாக்குறுதி நிறைவேறுமா?” டி.மோகன் கேள்வி

1341
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மிக மிக அவசியம். அந்த வகையில் தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளிகள் அமைந்தால் அதற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் கடந்து இதற்கான நடவடிக்கைகளுக்கு இந்திய அமைச்சர் மாண்புமிகு எம்.குலசேகரன் நடவடிக்கை எடுப்பாரா?” என மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்நாட்டில் தமிழ் மொழியும், தமிழ்ப் பள்ளிகளும், தொடர்ந்து நிலைபெற்று, தழைத்தோங்க கடந்த காலங்களில் மஇகா சார்பில் இருந்த அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புங்கள் என்று காணொளி வெளியிட்டிருக்கும் மனிதவள அமைச்சர் குலசேகரனின் நிலைப்பாட்டை வரவேற்கும் அதே வேளையில் அதற்காக அவர் என்ன செய்ய போகிறார்? தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பாரா?”  என்றும் டி.மோகன் இன்று வெளியிட்ட  அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பினார்.

“இன்றைய சூழலில் தமிழ்ப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமடைந்து வருகிறது. மாணவர்களின் பதிவு எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிவு கண்டு வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் மஇகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்தியில் எங்கள் ஆட்சி அமைந்தால் பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்போம் என டாக்டர் இராமசாமி முன்பே கூறியிருந்தார். தமிழ் மொழியும், தமிழ்ப்பள்ளிகளும் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று வீடியோவிலும் ஆடியோவிலும் சமூக வலைத்தளங்களிலும் அறிக்கை விடுவதை தாண்டி அதற்கான செயல் நடவடிக்கைகள் நன்மை பயக்கும்” என்றும் மோகன் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழியைக்காக்கவும், தமிழ்ப்பள்ளியை நிலைநிறுத்தும் நோக்கிலும் தமிழ் இடை நிலைப்பள்ளிகளை அமைப்பது காலத்தின் கட்டாயம் என்ற அவர், “மத்தியில் உங்கள் ஆட்சி இருக்கின்ற நிலையில் அது சாத்தியம் தானே” எனவும் கேட்டார்.

“சிலாங்கூர் மாநிலத்தில் பூச்சோங் 14-வது மைல் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு 6 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு பெறப்பட்டுள்ளது. முன்னுதாரணமாக அந்த இடத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைத்து ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவோம். இந்த வரலாற்று நிகழ்வுக்கு அரசியல் தாண்டி மாண்புமிகு எம்.குலசேகரனுடன் கைகோர்க்க நான் தயார். தமிழ் மொழி மீது அளவற்ற அன்பு கொண்ட அவர் தயாரா?” என்றும் மோகன் சவால் விடுத்தார்.

தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர் பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று மக்களை குற்றஞ்சொல்வது சாலச்சிறந்தது அல்ல என்று கூறிய மோகன், இந்நாட்டில் தமிழ்மொழி ஒரு பாதுகாப்பான மொழியாக இருக்க வேண்டுமானால் நான்கு இந்திய அமைச்சர்களும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“இதுவரை 530 தமிழ்ப்பள்ளிகள் தேசிய முன்னணி அரசாங்க ஆட்சியில் புதிய தோற்றத்திலும் புதிய பொலிவிலும் புதிய கட்டடங்களிலும் உருவாக்கப்பட்டிருந்தன. இதில் குறிப்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமான மானியங்கள் வழங்கி பல புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1 பில்லியன் அளவில் மானியங்கள் அளிக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது. இந்தத் தரத்தினை தொடர்ந்து நிலைநாட்டுவதோடு மேலும் புதிய தேசிய இடைநிலைப் பள்ளிகளை உருவாக்க நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் சீன மொழி இடைநிலைப்பள்ளிகள் இருப்பதால் சீன மொழி சிறப்பான மொழியாக போற்றப்படுகிறது. ஆகையால், சீன மொழி போன்று தமிழ் மொழியும் வளர்ச்சி காண வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் இதுவரை பல்வேறு திட்டங்களை அடிப்படை சூழலில் மஇகா கொண்டு வந்தாலும் அதை அமல்படுத்த கால தாமதமாகியிருக்கலாம்.அந்த திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அரசாங்கத்தில் முன்பைவிட அதிகமான இந்திய அமைச்சர்கள் இருப்பதால் நான்கு மடங்கு விரைந்து அமல்படுத்த முடியும். ஆகையால், எந்த திட்டங்களையும் செயல்படுத்துவதில் நமது அமைச்சர்களுக்கு சிரமம் இருக்காது. சமுதாயத்திற்கு நல்லதொரு திட்டங்களை நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மூலம் கொண்டு வந்தால் அதை அமல்படுத்துவதற்கு மஇகா எப்போதும் தடையாக இருக்காது. மஇகா தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும்”  என்றும் மோகன் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்