சென்னை : சமீபத்தில் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த், அக்சய் குமார், மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம், திரைக்கு வந்த நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
2.0 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் திரையீடு கண்டு சாதனைப் படைத்து வருகிறது.
இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தாலும், அதிகமானோர் இதன் பிரமாண்டத்தையும், தொழிநுட்பத்தையும் பாராட்டியே வருகின்றனர்.
இதற்கிடையில் மலேசியாவில் படம் வெளியாகி முதல் நாள் அனைத்து திரையரங்குகளிலும் நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு திரையரங்குகள் அதிகமான காட்சிகளைத் திரையிட திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படம் மலேசியாவில் மொத்தம் 200 திரையரங்குகளில் வெளியீடு கண்டு வெற்றி நடைப்போட்டு வருகிறது. 60 திரையரங்குகள் இத்திரைப்படத்தினை 3டி எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் திரையிட்டும், மேலும் 140 திரையரங்குகள் 2டி அமைப்பில் திரையிட்டும் வருகின்றன.
தமிழில் முதன் முதலாக நேரடியாக 3-டி கேமராவில் படம் பிடிக்கப்பட்டு வெளியான முதல் 3டி திரைப்படம் என்பதாலோ என்னவோ, அதற்குரிய அனைத்து நுட்பமான வேலைகளும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.
ஷங்கரின் இப்பிரமாண்ட திரைப்படம் 76 மில்லியன் அமெரிக்க டாலரில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகத் திகழ்கிறது. அதைவிட கூடுதலான தொகையை இத்திரைப்படம் வசூல் செய்து சாதனைப் புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.