Home உலகம் இந்தோனிசிய சுனாமி : ஒரு மலேசியர் காயம்

இந்தோனிசிய சுனாமி : ஒரு மலேசியர் காயம்

1182
0
SHARE
Ad

ஜாகர்த்தா: கடந்த சனிக்கிழமை இரவு இந்தோனிசியாவில் சுண்டா நீரிணையில் கடற்கரைகளைத் தாக்கிய சுனாமியில் ஒரு மலேசியர் காயமடைந்துள்ளதாக இந்தோனிசிய தேடுதல் மற்றும் மீட்பு மையத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

கைருல் உமாம் மாஸ்டுகி என்ற பெயர் கொண்ட அந்த 31 வயது மலேசியருக்கு கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், எனினும் அவர் தப்பித்து உயரமான பகுதிக்குச் சென்று தஞ்சமடைந்ததால் பின்னர் மீட்புக் குழுவினரால் காப்பாற்றப்பட்டதாகவும், அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரைச் சேர்ந்தவரான கைருல் உமாம் தொடர்பான மேல்விவரங்களைப் பெற மீட்புப் படையினருடன் தொடர்பில் இருப்பதாக ஜாகர்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகமும் அறிவித்திருக்கிறது.

டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமைஇரவுஅனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதில்  மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலைவரையில் 429 ஆக  உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 128 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 800 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.

இதற்கிடையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் ஏன் செயல்படவில்லை என ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த எச்சரிக்கைக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அவற்றை உடனடியாக சீர் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.