Home உலகம் இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 222 ஆக உயர்வு

1208
0
SHARE
Ad

ஜாகர்த்தா – எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி நேற்றிரவு இந்தோனிசியாவின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலையில் (சுனாமி) பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 222 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இந்தோனிசியாவில் உள்ள அனாக் கிராகாதாவ் (Anak Krakatau) என்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்த ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது. எரிமலையின் வெடிப்பு ஆழ்கடலின் அடிப்பாக நீர்நிலைகளை கிளர்ந்தெழச் செய்தது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 28 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் குறைந்தது 843 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சுனாமியால் சுற்றுலாப் பகுதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. சுமார் 558 வீடுகளும் 9 தங்கும் விடுதிகளும் மோசமான நிலையில் சேதமடைந்தன. மேலும் 60 உணவகங்களும் 350 படகுகளும் சேதமடைந்திருக்கின்றன.

இதுவரையில் வெளிநாட்டவர்கள் யாரும் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. மரணமடைந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர்களும், உள்நாட்டுச் சுற்றுப் பயணிகளும் ஆவர்.

நேற்றிரவு கடற்கரையோரப் பகுதியில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த இந்தோனிசியக் கலைக் குழுவினரும் இந்த கோர சம்பவத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர், மேலும் சிலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.