Home இந்தியா ஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி!

ஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி!

792
0
SHARE
Ad

புதுடில்லி: தற்போது அபு டாபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை காற்பந்துப் போட்டியில் இந்திய அணி கலந்துக் கொண்டு இரசிகர்கள் மத்தியில் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 அணிகள் கலந்து கொண்டுள்ள இப்போட்டியில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் களம் இறங்குகிறது.

இதற்கிடையே, நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தை 4-1 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆட்டம் தொடங்கிய 27-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து, அதன் வாயிலாக இந்தியா தனது முதல் கோலை புகுத்தியது. பிறகு, அடுத்த ஆறாவது நிமிடத்திலேயே தாய்லாந்து அணி ஒரு கோலை புகுத்தி சம நிலைக் கண்டது.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து, 46-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி இந்தியாவிற்கான இரண்டாவது கோலை பெற்றுத் தந்தார். மேலும், இரு கோல்களை, 68-வது நிமிடத்தில் உடண்டா சிங்கும், 80-வது நிமிடத்தில் ஜே ஜேலால்பெகுலாவும், புகுத்தி 4-1 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக முடித்தனர்.

இந்த அபார வெற்றியானது, 33 மூன்று வருடங்களுக்குப் பிறகு தாய்லாந்துக்கு எதிராகக் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்திய அணி 1986-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டேகா கோப்பையில் தாய்லாந்து அணியை வெற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தின் வழி இரு கோல்களைப் புகுத்தியதால், இந்தியக் காற்பந்து வீரர் சுனில் சேத்ரி அனைத்துலக போட்டிகளில் அதிக கோல்கள் புகுத்தியவர்கள் பட்டியலில், 65 கோல்களுடன் இரண்டாவது நிலைக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் அர்ஜெண்டினாவின் முன்னணி நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ளார். போர்த்துகல் அணியின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 85 கோல்களுடன் முதலாவது இடத்தில் இடம்பெறுகிறார்.