காஷ்மீர்: புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து, ஜய்ஷ்–இ–முகமட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில், சிஆர்பிஎப் படை வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜய்ஷ்–இ–முகமட் (ஜெஇஎம்) பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் மூன்று தீவிரவாதிகளும், ராணுவ மேஜர் உள்பட மேலும் அறுவர் பலியாகினர்.
பிங்க்லான் பகுதியில் ஜய்ஷ்–இ–முகமட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு இரகசியத் தகவல் கிடைத்ததும், அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை நடத்தினர்.
தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியதும், இரு தரப்பினருக்கும் இடையில் சண்டை மூண்டது. இச்சண்டை சுமார் பதினாறு மணி நேரங்களுக்குத் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இச்சண்டையில் கடந்த 14-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணமான தீவிரவாதி கொல்லப்பட்டிருக்கலாம் எனக் நம்பப்படுகிறது.