கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள டாயிஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை மலேசிய காவல் துறை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் கைது செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பல தேசிய தலைவர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தியதோடு, கெந்திங் ஹைலேண்ட்ஸ் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மதுபான தொழிற்சாலைகள், சூதாட்ட மையங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் அச்சுறுத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயினும், விசாரணையின் அடிப்படையில், அவர்களால் எந்த திட்டங்களும் தயார் நிலைகளும் செய்யப்படவில்லை என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
“சிறப்புக் கிளையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட அனைத்து பயங்கரவாத சந்தேக நபர்களும், டாயிஸ் சார்பு குழுக்களை ஆதரிப்பவர்கள்.
“காவல் துறை எப்போதும் இதுபோன்ற மரண அச்சுறுத்தல்களை கூடுதலாக கவனிக்கும். மேலும் விசாரணையின் முடிவுகளில் அவர்களால் எந்த திட்டங்களும் தயார் நிலைகளும் செய்யப்படவில்லை என்பதைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவருமே ஐந்து உள்ளூர் நாட்டவர்கள். ஒருவர் இந்தோனிசியர் ஆவார் என்று ஹாமிட் பாடோர் மேலும் கூறினார்.
புக்கிட் அமான் சிறப்புக் கிளை நடத்திய நடவடிக்கையின் போது, இரண்டு டாயிஸ் கொடிகள், ஒரு கத்தி மற்றும் அறிவாள் ஆகியவற்றை காவல் துறை பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
” கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் டாக்டர் மகாதீர் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல்களை வழங்கியதாக கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
அச்சுறுத்தலை வெளியிட்ட ஆறு நபர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130JB (1) (அ) இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.
முன்னதாக பல முக்கிய அரசாங்கத் தலைவர்கள் மீது தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக ஒப்புக்கொண்ட ஒருவரை புக்கிட் அமான் சிறப்பு பயங்கரவாதக் கிளை (இ 8) முன்பு கைது செய்ததாகத் தெரிவித்தது. அப்பட்டியலில், லிம் குவான் எங், முஜாஹிட் யூசோப் ராவா ஆகியோரும் அடங்குவர்.