சென்னை: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் அனைத்து நிருவாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களும், பிப்ரவரி 24-ஆம் தேதி, விருப்ப மனுக்களைப் பெறலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் இழுபரி நீடிப்பதால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து, கூட்டணி குறித்துப் பேசியதாக நிருபர்களிடம் சூசகமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசரை அழைத்ததே விஜயகாந்த்தான் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே தேமுதிகாவுக்கு ஒதுக்க இயலும் எனக் கூறிய, அதிமுக தற்போது ஐந்து தொகுதிகளைக் கொடுத்துவிடலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.