இஸ்லாமாபாத் – பாகிஸ்தானுக்கு 3 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு 7.50 மணிக்கு ராவல்பிண்டி இராணுவ விமானத் தளத்தை அடைந்த மகாதீரை பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் நேரில் சென்று வரவேற்றார்.
இந்த வருகையின்போது மகாதீருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது வழங்கப்படும்.
மலேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வணிக, அயலக உறவுகள் குறித்து பல்வேறு கோணங்களில் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருக்கின்றன.
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் அமையவிருக்கும் புரோட்டோன் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் இரு நாட்டுப் பிரதமர்களும் கலந்து கொள்வர்.
நாளை சனிக்கிழமை மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்படும் பாகிஸ்தான் நாள் கொண்டாட்டங்களிலும் மகாதீர் கலந்து கொள்வார்.
கடந்த ஆண்டில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்த இம்ரான் கானின் அழைப்பின் பேரில் மகாதீர் பாகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டிருக்கிறார்.
(படங்கள் : நன்றி – பாகிஸ்தான் அரசாங்க அதிகாரத்துவ டுவிட்டர் பக்கம்)