Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘மிஸ்டர் லோக்கல்’ – சிவகார்த்திகேயன், நயன்தாரா இருந்தும் சுவாரசியமில்லை – போரடிப்பு!

திரைவிமர்சனம்: ‘மிஸ்டர் லோக்கல்’ – சிவகார்த்திகேயன், நயன்தாரா இருந்தும் சுவாரசியமில்லை – போரடிப்பு!

1641
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒருவர் மட்டுமே தனியாக நின்றே ஒரு படத்தை வெற்றிப் படமாக, வசூல் படமாக மாற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர். அதற்கு சமீபத்திய உதாரணங்கள், ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’.

அதிலும், முன்னணி நடிகர் ஒருவருடன் நயன் இணைந்தால் அந்தப் படம் பிரம்மாண்டமானதாகவும், வசூல் சாதனையையும் புரிகிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம் “விஸ்வாசம்”.

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் இணையாக நயன்தாரா நடிக்கிறார் என்றதும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ‘சீமராஜா’ தோல்வியடைந்த நிலையில் அவர் சொந்தமாகத் தயாரித்த ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அந்தப் படம் கதையம்சத்தாலும், படமாக்கப்பட்ட விதத்தாலும் மாபெரும் வெற்றியடைந்தது.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலையில், சிவகார்த்திகேயன் – நயன்தாரா இருவரும் கைவசம் இருந்தும் – யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர் போன்ற நகைச்சுவைக் கூட்டணி இருந்தும் – ஒரு நல்ல படத்தை இரசிக்கும்படி எடுக்க வாய்ப்பிருந்தும் – கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் எம்.இராஜேஷ்.

சுவாரசியமில்லாத திரைக்கதை

எத்தனையோ தமிழ்ப் படங்களில் நாம் பார்த்து விட்ட சாதாரண ஏழை வீட்டுப் பையன், பணக்காரப் பெண்ணோடு மோதும் கதைதான். அன்று ரஜினி நடித்து சக்கைப்போடு போட்ட ‘மன்னன்’ கதையை அப்படியே உல்டா செய்திருக்கிறார்கள்.

ஆனால், சிவகார்த்திகேயன்-நயன் இருவருக்கும் இடையிலான காதலும், மோதலும் வலுவான சம்பவங்களால் சித்தரிக்கப்படவில்லை என்பது பெரும் குறை. படம் முழுவதும் வளவளவென்று பேசிக் கொண்டே  இருக்கிறார்கள். பல காட்சிகளில் தொலைக்காட்சி தொடர்போன்ற உப்புச் சப்பில்லாத சம்பவங்கள்.

முதல் பாதியில் சதீஷ், யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரோடு இணைந்து சிவகார்த்திகேயன் அடிக்கும் நகைச்சுவை லூட்டிகள் மட்டுமே இரசிக்கும்படி உள்ளன. அதிலும், ரோபோ சங்கர் தன்னுடன் வேலை செய்யும் சக பெண் பணியாளரை ஓரம் கட்ட எடுக்கும் முயற்சிகளும், மனைவியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதும் இரசிக்கலாம்.

ஆனால், நயன்தாரா கதைக்குள் நுழைந்ததும், ஒவ்வொருவராக கழன்று கொள்ள, பின்னர் முழுத் திரைக்கதையும் சிவகார்த்திகேயன்-நயன் இருவருக்கும் இடையில் மட்டும் சுற்றிச் சுழன்று வருவது போரடிப்பு.

நயன்தாரா படம் முழுக்க ஒரே மாதிரியான நடிப்பு. சில சமயங்களில் முறைக்கிறார். சில சமயங்களில் மிரட்டுகிறார். சில சமயங்களில் கண்களை உருட்டிக் காட்டுகிறார். பாடல் காட்சிகளில் இறுக்கமான உடைகளோடு நடனமாடுகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பு ஒரே பாணியில் நகர்கிறது. அடிக்கடி நயன்தாராவை ஏதோ பண்ணப் போகிறேன் என்பதுபோல் சவால் விடுவதும், பஞ்ச் வசனங்கள் பேசுவதுமாக வந்து போகிறார். ஆனால், இறுதிவரை உருப்படியாக எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை.

பின்பாதியில் கதைக்களம் தேவையில்லாமல் அப்படியே பாரிஸ் பக்கம் நகர்கிறது. என்னதான் திமிர் பிடித்த பணக்காரியாக இருந்தாலும், தன்னை விபத்திலிருந்து காப்பாற்றியவனை பாரிஸ் நகருக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்து ஏமாற்றுவாளா என்ற கேள்வி இயல்பாகவே எழுவது படத்தின் மிகப்பெரிய ஓட்டை.

படத்தின் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவும், சதீஷ், யோகிபாபு, ரோபோ சங்கர், ராதிகா போன்றவர்களின் நடிப்பும்தான்.

படத்தைக் காப்பாற்றும் இன்னொரு அம்சம் வசனங்கள். படத்தின் காட்சியையும், நிஜவாழ்க்கையையும் கலந்து பேசப்படும் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களைப் பெறுகின்றன.

உதாரணத்திற்கு:

சிவகார்த்திகேயன் நயன்தாராவுக்கு கார் டிரைவராக வேலைக்குச் சேர, இவளிடத்திலா டிரைவராகச் சேர்கிறாய் என மற்றவர் கிண்டலடிக்க, “தலையே அவருக்கு டிரைவரா வேலைக்குப் போயிருக்கிறார் (விஸ்வாசம் படம்) நான் எம்மாத்திரம்?” என்று கூறுகிறார்.

இன்னொரு காட்சியில் “கோலமாவு கோகிலான்னு ஒருத்தி இருந்தாளாம். தயிர்சாதம்னு சொல்லி டிபன் பாக்சுக்குள் கொக்கேய்ன் கடத்துனாளாம்” என்று நயன்தாராவிடமே கூறுகிறார் சிவகார்த்திகேயன்.

இதுபோன்ற வசனங்களைத் தவிர பாராட்டும்படி படத்தில் எதுவும் இல்லை. ஹிப் ஹாப் தமிழா இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

‘மிஸ்டர் லோக்கல்’ பார்த்து விட்டு சரியான போரடிப்பு என முகம் சுளித்து நீங்கள் வெளியே வருவது உறுதி.

இணையவாசிகளும் (நெட்டிசன்ஸ்) இணைய, சமூக ஊடகங்களில் படத்தைக் கன்னாபின்னாவென்று, தாறுமாறாக திட்டி விமர்சித்து வருகிறார்கள்.

எனவே, ஓரிரு மாதங்கள் கழித்து, தொலைக்காட்சியிலோ, நெட்பிலிக்சிலோ இந்தப் படத்தைப் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்.

-இரா.முத்தரசன்