Home நாடு மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு

மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு

1535
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை ஹாலிடே வில்லா (Holiday Villa) தங்கும் விடுதியில் நடத்துகிறது.

முதல் முறையாக இம்மாநாட்டில் தமிழ் மொழிக்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் உலகெங்கும் உள்ள மொழியியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மொழி தொடர்பான ஆய்வுகள் செய்பவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள்.

“உரைக்கோவை-சமூகம்-ஊடாடல்” எனும் UMDS2019-இன் கருப்பொருள், அன்றாட கருத்தாடலில் இடம் பெறுகின்ற தொடர்பாடல் தரவுகளைப் புரிந்துகொள்ளும் புதிய வழிமுறைகளைத் தெளிவுப்படுத்துவதையும் மொழி, மொழியியல், தொடர்பாடல் ஆகிய சிக்கல்கல்களுக்குத் தீர்வுகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

“உரைக்கோவை-சமூகம்-ஊடாடல்” – வீடு, வேலையிடம், பள்ளிக்கூடம், பிற சமூக நிகழ்ச்சிகள் போன்ற உரைக்கோவை ஈடுபாடுகளிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பெறக்கூடிய பொருள் பொதிந்த தரவுகளைப் பற்றிய மொழி ஆய்வு தொடர்பான பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் அறிஞர்கள், நிறுவப்பட்ட பகுப்பாய்வுச் சட்டகங்களையும் முந்தய ஆய்வுகளையும் பயன்படுத்தி அறிவுப்பூர்வமான ஆய்வுகளைப் படைப்பர்.

UMDS2019 மாநாடு, உரைக்கோவை, சமூகம், ஊடாடல் ஆகிய ஆய்வுகளில் வல்லமைப் பெற்ற அறிஞர்கள் கூடுகின்ற சபையாகும். ஆய்வு முறைமைகள், பகுப்பாய்வு சட்டகங்கள், ஆய்வு முடிவுகள் தொடர்பான சுவாரசியமான விவாதங்களையும் கருத்தாடல்களையும் இம்மாநாட்டில் எதிர்பார்க்கலாம்.

கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கிய, உரைக்கோவை, சமூகம், ஊடாடல் ஆகியவற்றை மையமிட்ட ஆய்வுகளையும் ஆய்வுச் சுருக்கங்களையும் UMDS2019 வரவேற்கிறது.

• காட்சித் தொடர்பாடலும் உரைக்கோவையும் (Visual communication and discourse)
• மொழியியல் நிலத்தோற்றம் (Linguistics landscapes)
• மொழியும் சமூகமும் (Language and society)
• மொழியும் ஆற்றலும் (Language and power)
• மின்னியல் ஊடகமும் உரைக்கோவையும் (Digital media and discourse)
• பாலின உரைக்கோவை (Gendered discourse)
• மின்னியல் ஊடகமும் மக்கள் பண்பாடும் (Digital media and popular culture)
• பண்பாட்டு பல்வகைமையும் ஊடாடலும் (Cultural diversity and interactions)
• மொழியும் அடையாளமும் (Language and identity)
• மொழி, சமயம், அடையாளம் (Language, religion, and identity)
• மொழி வகைகள், பன்மொழிச் சூழல், பண்பாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் (Language varieties, multilingualism, and cross-cultural communication)
• மொழியியல் நிலத்தோற்றமும் காட்சித் தொடர்பாடலும் (Linguistic landscape and visual communication)
• எழுத்தறிவும் கல்விக்கொள்கைகளும் (Literacies and educational policies)
• நிபுணத்துவ உரைக்கோவையும் சிறப்பு நோக்கங்களுக்கான மொழியும் (Professional discourse and language for specific purposes)
ஆய்வுச்சுருக்கங்கள், அவற்றின் பொருத்தமான நடை, மொழி ஆளுமை (இலக்கணப் பிழைகளின்மை), கருத்திணக்கம், தெளிவு என்பனவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படும் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஆய்வுச்சுருக்கங்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க (உள்ளடக்கியிருக்க) வேண்டும்.

• அறிமுகம்
• நடப்புச் சிக்கல்கள், ஆய்வுச்சிக்கல், ஆய்வு மேற்கொண்டதற்கான காரணங்கள், ஆய்வின் இலக்கு (நோக்கங்கள்/வினாக்கள்) ஆகிய்வற்றைக் குறிப்பிடுதல்
• ஆய்வுமுறைமை
• ஆய்வின் வடிவமைப்பு, தரவு வகைகள், தரவு சேகரிப்பு முறைமைகள், பகுப்பாய்வு சட்டகம் ஆகிய்வற்றைக் குறிப்பிடுதல்
• கண்டுபிடிப்புகளும் எதிர்பார்ப்புகளும்
• கருச்சொற்கள்: அதிகப்பட்சம் ஐந்து (5) சொற்கள்/சொற்றொடர்களைக் குறிப்பிடுதல்

இம்மாநாட்டில் முதல் முறையாக தமிழுக்கான அமர்வும் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இம்மாநாட்டில் மலேசிய கல்வியாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஆரம்ப –இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்சி கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள், முதுகலை , முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

மேல் விபரங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக, மொழி மொழியியல் புலத் தமிழ் விரிவுரையாளர் சி.ம.இளந்தமிழ் அவர்களை 0123143910 எண்ணில் அல்லது மின்னஞ்சல் elanttamil@um.edu.my தொடர்பு கொள்ளலாம்.