கோலாலம்பூர் – கடந்த ஓராண்டாக மலேசியாவின் காப்பிக் கடைகளிலும், ஊடகங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு விவகாரம் பிரதமர் துன் மகாதீர் அன்வார் இப்ராகிமுக்கு வழிவிட்டு, தனது பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா? அல்லது அன்வார் மீண்டும் பிரதமராகாமல் இருக்க – அதைத் தடுக்க – வியூகம் வகுத்துச் செயல்படுவாரா என்பதுதான்!
அன்வார்தான் அடுத்த பிரதமர் என மகாதீர் உறுதியாக அறிவித்து விட்டாலும், அவ்வப்போது அவரது நடவடிக்கைகளும், அறிக்கைகளும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.
தற்போது லத்தீஃபா கோயா ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் – இந்த நடவடிக்கை அன்வாரைப் பிரதமர் ஆவதிலிருந்து தடுக்கும் திட்டங்களில் ஒன்று என மீண்டும் சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
மசீச தலைவர், வீ கா சியோங் கூட தனது அறிக்கை ஒன்றில் அன்வாருக்காக நான் வருத்தப்படுகிறேன், காரணம், லத்தீஃபா கோயா எப்போதுமே அன்வாரைக் குறிவைத்து அவருக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார் எனத் தெரிவிக்கிறார்.
அன்வாரைப் பிரதமர் ஆவதிலிருந்து தடுக்கும் மாபெரும் சதியாலோசனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கக் கூடாது எனத் தான் நம்புவதாகவும் வீ கா சியோங் கூறியிருக்கிறார்.
லத்தீஃபாவின் நியமனத்தால், ஊழல் ஆணையத்தின் தோற்றமும், நடுநிலையும் சிதைந்து விட்டதாகக் கூறியிருக்கும் அவர், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அரசாங்க இலாகாக்களுக்கு தலைமையேற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
முகமட் சுக்ரி அப்துல்லின் பதவி விலகலுக்குப் பின்னர் அந்த ஆணையத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரே தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்றும் வீ கா சியோங் வலியுறுத்தி இருக்கிறார்.