பினாங்கு, ஏப்ரல் 3 – இன்று காலை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து, பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பினாங்கு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 9:30 மணியளவில் பினாங்கு மாநில ஆளுநர் துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் முன்னிலையில் பினாங்கு சட்டமன்றம் கலைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பினாங்கு சட்டமன்றம்
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பினாங்கு மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில், ஜ.செ.க 19 தொகுதிகளையும், பி.கே.ஆர் 9 தொகுதிகளையும், பாஸ் கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றி மக்கள் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்தது.
தேசிய முன்னணி, அம்னோவுடன் இணைந்து 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
பினாங்கு நாடாளுமன்றம்
கடந்த பொதுத் தேர்தலில், பினாங்கிலுள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளில், ஜ.செ.க 7 தொகுதிகளையும், பி.கே.ஆர் 4 தொகுதிகளையும் மற்றும் தேசிய முன்னணி 2 தொகுதிகளையும் கைப்பற்றியது.