பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் – ம.ஜ.த. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு கர்நாடகாவில் உருவாகவுள்ளது.
குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அரசியல் குழப்பம், பெரும்பான்மை குறித்த பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் 16 சட்டமன்ற உறுப்ப்னர்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். பதவி விலகல் கடிதத்தை கொடுத்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர், ஆயினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
ஆளுங்கட்சிக்கு போதிய ஆதரவு காணப்படாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
வாக்கெடுப்பு நடைபெறுவது குறித்து நீண்ட சர்ச்சை எழுந்தது. எல்லா தடைகளையும் மீறி, வாக்கெடுப்பு நடைபெற்ற போது குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.