கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் அமைச்சர் ராயிஸ் யாத்திம் ஆதரித்துள்ளார்.
இந்திய நாட்டைச் சேர்ந்த ஜாகிர் மலேசியாவில் சர்ச்சையைத் தூண்டும் வகையில் சில கருத்துகளை வெளியிட்டு வந்ததைத் தொடர்ந்து ராயிஸ் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஜாகிர் நாயக் இங்கு வருவதற்கு முன்பு, நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது அவர் இந்துக்களை தனது கருத்துக்களால் குறைத்து மதிப்பிட்டுள்ளார். ஜாகிர் ஒரு தூண்டுதல் காரராக இருந்து வருகிறார். அவர் இந்தியாவுக்கு திரும்புவது சிறந்தது” என்று ராயிஸ் கூறினார்.
பணமோசடி குற்றச்சாட்டில் இந்திய அரசினால் கோரப்படும் ஜாகீரை மலேசியாவில் வைத்திருப்பது இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர பிரச்சனையை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர் காரணமாக, மலேசியா–இந்தியா உறவில் விரிசல் ஏற்படலாம். நமக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜாகிர், கடந்த வாரம் ஓர் உரையில், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை விட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மலேசிய இந்துக்கள் அதிகம் ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தார். ஆயினும், தாம் அவ்வாறு கூறவில்லை என்று ஜாகிர் மறுத்துள்ளார்.