கோலாலம்பூர்: ஊழலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்க நிதிகளை கையாளும் அனைத்து அரசியல்வாதிகளும், தங்கள் சொத்துகளை அறிவிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஓர் அரசியல்வாதி ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காக, இந்த நடவடிக்கையும் அவசியம் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா கூறினார்.
“சிலாங்கூரில் மட்டுமல்லாமல், பிற மாநில ஆட்சுக்குழுவினர், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் ஆகியோரும் தங்கள் சொத்துகளை அறிவிக்குமாறு நான் அம்மாநில அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் சொத்து அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும், ஏனெனில் மாநிலத்திற்கு அதிக நிதிகள் வழங்கப்படுகின்றன. இதனால்ஊழல் ஏற்படுவதற்கானவாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், எதிர்க்கட்சி உள்ளிட்டவர்கள் கட்டாயமாக தங்களின் சொத்துகளை அறிவிப்பதை ஏற்கவில்லை என்றும், அந்தந்த சொத்துக்கள் பிற வருமான ஆதாரங்களையும் உள்ளடக்கியது என்றும் கூறியிருந்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்வது, அனைவருக்கும் நியாயமான போக்கினை எம்ஏசிசி செயல்படுத்துவதற்கே என்று லத்தீஃபா தெளிவுப்படுத்தினார்.