Home One Line P2 சந்திராயன் 2 : நிலவுக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சோகம்

சந்திராயன் 2 : நிலவுக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சோகம்

1764
0
SHARE
Ad
பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையம்

பெங்களூரு – இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த, இந்திய விண்கலம் விக்ரம் நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் சந்திராயன் 2 என்ற திட்டத்தில் திடீரெனத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் (Orbiter) விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் எனப் பெயர் சூட்டப்பட்ட லேண்டர் என்ற இயந்திரப் பொறி (Lander) நிலவில் கால்பதிக்க 2.1 கிலோமீட்டர் தூரமே இருக்கும் நிலையில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.39 மணியளவில் விக்ரம் லேண்டரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இதனால், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினரும், இந்திய மக்களும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கினர்.

இஸ்ரோ தலைவர் சிவன் கலங்கிய கண்களுடன் விக்ரமுடனான தொடர்புகள் கிடைக்கவில்லை என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விக்ரம் நிலவில் கால்பதிக்கும் காட்சியை நேரடியாகக் காண பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையம் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஏற்பட்டிருக்கும் தடங்கல்களைக் கண்டு இஸ்ரோவின் அறிவியலாளர்கள் கலங்க வேண்டாம் என்றும் “உங்களுடன் என்றும் நான் இருப்பேன். தொடர்ந்து உங்களின் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்” என ஆறுதல் கூறி உற்சாகமூட்டியுள்ளார்.

நாம் சாதித்திருப்பது கொஞ்சமானது அல்ல மிகப் பெரிய சாதனை என்று கூறிய மோடி, தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் நிலவின் மண்பிரதேசத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரமின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும் நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் விண்கலத்திடம் இருந்து தொடர்ந்து தரவுகள் பெறப்பட்டு வருவதாகவும், இந்தத் தரவுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிட்டர் விண்கலம் தொடர்ந்து அடுத்த ஓராண்டுக்கு நிலவைச் சுற்றி வருவதற்கான ஆற்றல் இருக்கிறது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. ஆர்பிட்டர் விண்கலத்திற்கும் விக்ரமுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த தரவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

நிலவில் தரையிறங்கும் முயற்சியில் விக்ரம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு