Home One Line P1 விடுதலைப் புலிகள் : “ஜசெக தலைவர்கள் யாரும் இனி கைது செய்யப்படமாட்டார்கள்” குவான் எங்

விடுதலைப் புலிகள் : “ஜசெக தலைவர்கள் யாரும் இனி கைது செய்யப்படமாட்டார்கள்” குவான் எங்

903
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் இந்திய சமூகத்தினருக்கு அதிர்ச்சி தரும் வகையில், இன்று வியாழக்கிழமை இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் இருவரையும் தற்காத்து ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

“இதற்கு மேலும் வேறு ஜசெக தலைவர்களோ, ஜசெகவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்படும் சாத்தியம் இல்லை என காவல் துறை சார்பில் தனக்கு உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் லிம் குவான் எங் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தங்கள் கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றமற்றவர்கள் என நம்புவதாகவும், இதுவரையில் தங்களின் கட்சியின் கோட்பாடுகளான நடுநிலைமை, சரிசமமான அணுகுமுறை, வன்முறையில்லாத அமைதியான முறையில் தீர்வு காணுதல் ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டில் அவர்கள் செயல்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் லிம் குவான் எங் தனது அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், எனினும் ஜசெக அந்த இருவர் பின்னும் உறுதியாக நிற்கும் என சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தான் கூறியிருப்பதாகவும் லிம் குவான் எங் மேலும் தெரிவித்தார்.

சொஸ்மா எனப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன், நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இருவரும் 28 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட சட்டம் வகை செய்கிறது.

“இவர்கள் இருவர் மீதான விசாரணைகள் சீக்கிரம் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்குரிய அறிக்கைகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் விரைவாக அனுப்பப்பட காவல் துறையினர் உறுதியளித்தனர். இதன் வாயிலாக அந்த இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களும் சீக்கிரமாக விடுதலை செய்யப்பட முடியும்” என்றும் லிம் குவான் எங் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.

“தங்களின் கைது நடவடிக்கைக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர் என்றும் எல்லா உயர்மட்டத் தலைவர்களோடும் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இனியும் வேறு ஜசெக தலைவர்களோ, ஜசெகவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்படும் சாத்தியம் இல்லை என காவல் துறை சார்பில் எனக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது” எனவும் லிம் குவான் எங் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

ஜசெக சார்பில் 2 வழக்கறிஞர்கள்

சாமிநாதன், குணசேகரன் கைது தொடர்பில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் ஆகிய இருவரும் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றும் குவான் எங் சுட்டிக் காட்டினார்.

கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களின் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்திருப்பதாக குவான் எங் குறிப்பிட்டார்.

குலசேகரன் ஒருங்கிணைப்பாளர்

கைது செய்யப்பட்ட இருவரும் காவல் துறையினரிடம் அமைதியாகவும் ஒத்துழைப்போடும் நடந்து கொண்டதாக காவல் துறையினர் பாராட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட ஜசெகவின் சார்பில் கட்சியின் உதவித் தலைவர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குவான் எங் தனது அறிக்கையில் தெரியப்படுத்தினார்.

“கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது அவர்கள் சந்தித்துள்ள பிரச்சனையை ஒரு சவாலாகவும், விடாமுயற்சியோடும், நிலைகுலையாமல் நம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். உண்மை, கூடிய விரைவில் வெளிவந்து நிலைபெறும் என்பதோடு அவர்கள் இருவரையும் விடுதலை காணச் செய்யும் என்றும் ஜசெக நம்புகிறது” என்றும் குவான் தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்தார்.