Home One Line P1 விடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை

விடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை

904
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களில், பி.சுப்பிரமணியம் என்ற ஒருவர் சார்பாக ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கோர்ப்பஸ் – habeas corpus) ஒன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 21-ஆம் தேதி) விசாரிக்கப்படவிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்கொணர்வு மனு என்பது, ஒருவர் காணாமல் போயிருந்ததாகக் கருதப்பட்டாலோ, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றாலோ, அல்லது காவல் துறையின் கைப்பிடியில் இருக்கிறார் என்பது தெரிய வந்தாலோ, அவரை நீதிமன்றத்தில் நேரில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் – அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும் – என நீதிமன்றத்தை உத்தரவிடக் கோரும்  விண்ணப்பம்தான் ஹேபியஸ் கோர்ப்பஸ் எனப்படும் ஆட்கோணர்வு மனுவாகும் (ஹேபியஸ் கோர்ப்பஸ் என்பது லத்தீன் சொற்றொடர்).

இந்த வழக்கில் 57 வயதான பி.சுப்பிரமணியம் காவல் துறையின் தலைவரைப் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு வழக்கை சமர்ப்பித்திருக்கிறார். அவரது சார்பில் செல்வம் சண்முகம் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர்கள் நிறுவனம் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி இந்த வழக்கைச் சமர்ப்பித்துள்ளது. சுப்பிரமணியத்தை விடுதலை செய்யவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பொதுவாக இத்தகைய வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுவதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கப்படும்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தொடர்ந்து பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட ஜசெக தலைவர்களுக்கு ஜசெகவின் ராம் கர்ப்பால் சிங், ஆர்எஸ்என் ராயர் ஆகியோர் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மற்றும் சிலருக்கு மஇகா சட்ட உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் சுப்பிரமணியத்தின் வழக்கின் போக்கை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்த வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 12 பேரும் தற்போது சொஸ்மா எனப்படும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 28 நாட்களுக்கு விசாரணையின்றி அவர்களில் காவலில் எடுத்து விசாரிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

எனினும், இவர்களின் விசாரணைகளைக் காவல் துறை விரைவாக முடிக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.