கோலாலம்பூர்: பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய சிலாங்கூரில் உள்ள 95 தமிழ் பள்ளிகளுக்கு, மொத்தமாக 4.4 மில்லியன் ரிங்கிட் உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஷா அலாமில் உள்ள மாநில செயலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மற்றும் சமூக பொருளாதார வலுவூட்டல், மேம்பாடு மற்றும் நலன் குழுத் தலைவர் வி.கணபதிராவ் இத்தமிழ் பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கு காசோலைகளை வழங்கினர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் இப்பள்ளிகள் மானியங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இந்நிதிகள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை 97 தமிழ் பள்ளிகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
“சிலாங்கூர் நாட்டில் ஒரு பொருளாதார சக்தியாக இருக்க வேண்டும்.”
“குண்டர் கும்பல் போன்ற விவகாரங்களில் இந்திய சமூகத்தை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க கல்வி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்” என்று அமிருடின் தனது உரையில் கூறினார்.
புத்ரா ஹைட்ஸில் உள்ள புதிய கட்டிடத்திற்கான தளபாடங்கள் வாங்க லாடாங் சீ பீல்ட் தமிழ்பள்ளிக்கு 200,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக கணபதிராவ் தெரிவித்தார்.
முன்னதாக வழங்கப்பட்ட நிதி பற்றாக்குறையால், மாணவர்களுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கு, பள்ளி வளர்ச்சிக்கு இந்த உயர்ந்த தொகை வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
“பள்ளியின் வளர்ச்சி செலவுகளுக்காக இந்த ஒதுக்கீடு குறிப்பாக வழங்கப்பட்டது. நிதியை வேறு எதற்கும் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. நிதி தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க பள்ளிகளை நாங்கள் கண்காணிப்போம். பள்ளிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.
சிலங்கூரில் உள்ள இரண்டு தமிழ் பள்ளிகள் தங்கள் விண்ணப்பங்களில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் சிறப்பு ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கணபதிராவ் கூறினார்.
“இரண்டாம் கட்டமாக, பிற தமிழ் பள்ளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி விரைவில் தொடங்கும்,” என்று அவர் கூறினார்.