கோலாலம்பூர்: தமது இரண்டு கட்டுரைகள் தொடர்பாக, நேற்று திங்கட்கிழமை புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, ஜாகிர் நாயக்கின் சர்ச்சையை திசைத் திருப்புவதற்காகவே தம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பத்து அராங் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல் துறையின் செயலை கேள்விக்குட்படுத்தியதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவுடன் அவர் கூறிய உறவுகளை விளக்குவதற்காகவும் நேற்று, இங்குள்ள புக்கிட் அமான் காவல் துறை தலைமயகத்தில் மூன்று மணி நேர வாக்குமூலத்தை அவர் அளித்தார்.
தம்மைப் பற்றிய இரண்டு காணொளிகள் காட்டப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
“அவர்கள் எனக்கு காணொளிகளைக் காட்டினர் மற்றும் நூற்றுக்கணக்கான காவல் துறை புகார் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று என்னிடம் சொன்னார்கள்,” என்று அவர் கூறினார்.
குற்றவியல் மிரட்டல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிற குற்றச்சாட்டுகளுக்கு தண்டனைச் சட்டம் 506-இன் கீழ் இராமசாமி விசாரிக்கப்படுகிறார்.
தம்மை மோசமான காட்சிப்படுத்துவதற்கு இது செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அமைதிப்படுத்தும் முயற்சி உள்ளது. நான் நீதிமன்றத்தில் சம்மன் அனுப்பியிருக்கிறேன்.” என்று அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகருக்கு எதிராக தனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்றும், ஆனால் இன அமைதியின்மையை ஏற்படுத்தும் அவரது முயற்சிகளை தாம் மன்னிக்கவில்லை என்றும் இராமசாமி கூறினார்.
“முஸ்லிமல்லாதவர்களை இழிவுபடுத்த வேண்டாம். இனப்பிரச்சனையைத் தூண்ட வேண்டாம். நம் நாட்டுக்கு நம்முடைய விசுவாசத்தைப் பற்றி கேள்வி கேட்க வேண்டாம், ”என்று அவர் மேலும் கூறினார்.
“விடுதலைப் புலிகள் பிரச்சனைகள் நாயக் மலேசியாவிற்கு வருவதற்கு முன்பு நடக்கவில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தனது கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதாகவும் அவர் கூறினார்.
“நான் இங்கே பிறந்தேன், நான் இங்கே படித்தேன், இங்கேயே திருமணம் செய்து கொண்டேன். இங்கே இறப்பேன்,” என்று அவர் கூறினார்.