பொந்தியான்: கெராக்கான் கட்சித் தலைவர் டொமினிக் லா ஹோ சாய் மீது தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி நிருவாகம் குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்ததாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
லாவின் அறிக்கைகள் தொடர்பாக மஸ்லீயின் அரசியல் செயலாளர் மஹ்முட் காசிம் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நாட்டில் மாணவர்களுக்கு கற்பிக்க சவுதி அரேபிய ஆசிரியர்கள் மலேசியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனும் கருத்தினை தவறாக வெளியிட்டுள்ளதால் அவர் மீது இந்த புகார் பதிவிடப்பட்டுள்ளது.
“சவுதி அரேபிய ஆசிரியர்கள் மலேசியாவில் ஆசிரியர் கல்வி நிறுவனம் (ஐபிஜிஎம்) மற்றும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகம் (யுபிஎஸ்ஐ) மூலம் தேசிய கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள மலேசியாவில் இருப்பார்கள்.”
“அவர்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்தி அறிவியல் மற்றும் கணித பாடங்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை தெரிந்துக்கொள்வார்கள். அவர்கள் நம் நாட்டில் மாணவர்களுக்கு கற்பிக்க பணியமர்த்தப்படவில்லை” என்று மஹ்முட் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தவறான தகவல் மற்றும் எதிர்மறை உணர்வுகள் பரவுவது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவை சீர்குலைக்கும் மற்றும் எல்லை தாண்டிய கல்வி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.