கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நேற்றிரவு ஜாலான் ஈப்போவில் உள்ள ஓர் உணவகமொன்றில் சந்திப்புக் கூட்டத்தை முடித்து வெளியேறிய போது, தமது காரின் மீது முட்டைகள் வீசப்பட்டதை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் தெரிவித்தார்.
காவல் துறைத் தகவலின்படி, பத்து 4/12 ஜாலான் ஈப்போவில் அவரது கார் உணவகத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
“நான் உணவகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். என் ஓட்டுனரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டேன். கூட்டத்தை முடித்துவிட்டு அதிகாலை 12.20 மணியளவில் நான் காருக்குச் சென்றேன். என் காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் முட்டைகள் இருப்பதைக் கண்டேன்”
“தற்போதைய சூழலில் எனது பாதுகாப்பு கருதி, எந்தவொரு அசம்பாவிதங்களும் எனக்கு நேராமல் இருக்க நான் இந்த புகாரை வழங்குகிறேன்” என்று பிரபாகரன் செந்துல் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் அளித்த காவல் துறைப் புகார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், 14 அரசு சாரா அமைப்புகள் பிரபாகரனை பதவி விலகி, தியான் சுவாவிற்கு அந்த தொகுதியைத் தரச் சொல்லி வளியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இருப்பினும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக வேண்டும் என்ற எந்தவொரு வேண்டுகோளையும் தாம் முன்னிறுத்தவில்லை என்று தியான் சுவா மறுத்துள்ளார்.
இதனிடையே, தாம் செய்து வரும் பணிகளை பாதியிலேயே விட்டு விட்டு பதவி விலகப்போவதில்லை என்று பிரபாகரன் வலியுறுத்தியிருந்தார்.