Home One Line P1 ஹிண்ட்ராப் போராட்டத்தின் நினைவு நாள் : இந்தியர் பிரச்சனைகளைத் தீர்க்காத மகாதீரைச் சாடினார் உதயகுமார்

ஹிண்ட்ராப் போராட்டத்தின் நினைவு நாள் : இந்தியர் பிரச்சனைகளைத் தீர்க்காத மகாதீரைச் சாடினார் உதயகுமார்

1182
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்ற ஹிண்ட்ராப் போராட்டத்தின் நினைவு நாளில் நடத்திய கூட்டத்தில் பேசிய பி.உதயகுமார், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்காத துன் மகாதீரை சாடினார்.

“நாடற்ற இந்தியர்களின் பிரச்சனைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்த்து வைப்போம் என்று இவர்கள் சொன்னார்கள். தமிழ்ப் பள்ளிகள் அனைத்தையும் அரசாங்க உதவி பெற்ற பள்ளிகளாக மாற்றுவோம் என்று வாக்குறுதி வழங்கினார்கள். இதுபோன்ற எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளை இந்தியர்களுக்கு வாரி வழங்கிவிட்டு, ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று வரை எதுவும் செய்யவில்லை. இதையெல்லாம் ஒரே கையெழுத்தின் மூலம் மகாதீரோ, பக்காத்தான் தலைமைத்துவமோ தீர்த்து விட முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அம்னோவின் இனவாத அரசியலைத்தான் இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் உதயகுமார் கூறினார்.

ஹிண்ட்ராப் தலைமைத்துவத்துடனும், தனது சகோதரர் வேதமூர்த்தியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹிண்ட்ராப் 2.0 என்ற இயக்கத்திற்கு உதயகுமார் தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் அழிக்க முடியாத நாள் 2007-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதியாகும். அன்றுதான் கோலாலம்பூரில் நடைபெற்ற ஹிண்ட்ராப் ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தனர்.

மற்றொரு ஹிண்ட்ராப் போராளியான வேதமூர்த்தி வெளிநாட்டில் இருந்து கொண்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

அதற்கடுத்த ஆண்டில் – 2008-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் போராட்டங்களின் விளைவால் தேசிய முன்னணி படுமோசமான தோல்வியைத் தழுவியது. 5 மாநிலங்களை இழந்தாலும், மீண்டும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று மத்திய அரசாங்கத்தை அமைத்தது தேசிய முன்னணி.

கால ஓட்டத்தில் இன்று அரசியல் காட்சிகள் மாறி விட்டாலும், கூட்டணிகள் மாறிவிட்டாலும், ஹிண்ட்ராப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் இந்தியர்களின் மனங்களில் மாறாத பசுமையுடன் ஆழப் பதிந்திருக்கிறது.