கோலாலம்பூர்: ‘பாக் நாசிர் நாசி லெமாக்’ மற்றும் ‘அங்கிள் சின்ஸ் சிக்கன் ரைஸ்’ போன்ற ஏர் ஆசியா விமானத்தின் முதன்மை உணவுகள் இப்போது சந்தான் உணவகம் மற்றும் டி அண்ட் கோ கபே ஆகியவற்றில் கிடைக்கும்.
இங்குள்ள மிட் வெலி விற்பனை மையத்தில் கிடைக்கும்படியாக அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) இவ்வுணவகங்கள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் வீடுகளிலிருந்து santan.com.my அல்லது T&CO கைபேசி பயன்பாட்டில் இருந்து இணையம் மூலமாகவும் தங்களின் உணவுகளை வாங்கலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது. ஆயினும், பொதுமக்கள் அவ்வுணவுகளை அவர்களாகவே சென்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை அறிமுகப்படுத்திய உள்நாட்டு வணிக மற்றும் வாடிக்கையாளர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், ஏர் ஆசியாவின் சமீபத்திய முயற்சி குறித்து நம்பிக்கை தெரிவித்ததோடு, வாடிக்கையாளர்களின் திருப்தியை அதிகரிக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அந்நிறுவனம் நகர்வதை பாராட்டியுள்ளார்.
ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், ஏர் ஆசியா விமான நிறுவனம் தனது துரித உணவு விடுதியை இலண்டன் மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் திறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏர் ஆசியாவின் சொந்த உணவு விநியோக பயன்பாட்டை நேரத்திற்கு ஏற்ப கொண்டு வருவதற்கான திட்டங்களும், அத்துடன் தற்போதுள்ள நிறுவனங்களான கிராப் மற்றும் புட்பாண்டாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்களும் உள்ளன என்றும் அவர் கூறினார்.