கோலாலம்பூர்: தாம் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிப்பதாகவும், கட்சிக்கு எதிரான விமர்சனங்களை ஏற்பதாகவும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிகேஆரை பலவீனமான கட்சியாக கருதுபவர்களுக்கு எதிராக, தமது பொறுமைக்கும் வரம்புகள் உள்ளன என்று அன்வார் நினைவுப்படுத்தினார்.
“ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை வெளியிட உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன், நான் பொறுமையாக இருக்கிறேன். இருப்பினும், கட்சி பிளவுபட்டுவிட்டதாகவும், பலவீனமாகிவிட்டதாகவும் கருதுபவர்களின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியின் வலிமையைக் கட்டியெழுப்புவது எனது பொறுப்பு,” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தாம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவை வழங்குவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் பொறுப்புகளை சுமப்பது எளிதானது அல்ல என்று அவர் கூறினார்.
“நாம் விஷயங்களை சிக்கலாக்கக் கூடாது, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பிளவுபடக்கூடாது” என்று அன்வார் கூறினார்.