கோத்தா கினபாலு: சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபி அப்துல் பணம் வழங்குவது போல் உள்ள புகைப்படம், கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுடன் தொடர்பில்லாதது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி சண்டாக்கானில் அமைந்துள்ள டத்தோ பங்கெரான் கால்பாம் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தொண்டு நிகழ்ச்சியின் போது இந்த படம் எடுக்கப்பட்டதாக சபா மாநில எம்ஏசிசி இயக்குனர் எஸ்.கருணாநிதி தெரிவித்தார்.
“சபா எம்ஏசிசி பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றது மற்றும் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியது.”
“முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதியன்று சண்டாக்கான் விமான நிலைய திட்டத்துடன் சம்பந்தப்பட்டது. கிமானிஸ் இடைத்தேர்தலுடன் சம்பந்தம் இல்லை என்பதைக் கண்டறிந்தது,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் இந்த படம் குறித்து வாரிசான் கட்சித் தலைவரான முகமட் ஷாபி மறுத்தது குறிப்பிடத்தக்கது.