கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அகமட் ஆகியோரின் உரையாடல்கள் பதிவுகளை எம்ஏசிசி இன்று புதன்கிழமை வெளியிட்டது.
அமெரிக்க நீதித் துறையின் சிவில் மற்றும் அவதூறு வழக்கு தொடர்பாக, நஜிப் மற்றும் சவுதியின் முக்கிய நபருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிசா அசிஸுக்கு 1எம்டிபி நிதிகள் அனுப்பப்பட்டது குறித்தும் அந்த பதிவில் இருந்தன.
மற்றொரு தொலைபேசி அழைப்பில் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோரும் ஈடுபட்டுள்ளார்.
அனைத்து உரையாடல்களும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையில் நடைபெற்றுள்ளன.
ஆண்டு தொடங்கிய சில தினங்களுக்கு முன்பு தமக்கு இந்த இரகசிய பதிவுகள் கிடைத்ததாகவும், தடயவியல் விசாரணையின் பின்னர், இப்பதிவுகள் உண்மையானது மற்றும் திருத்தப்படாதது என்று கண்டறியப்பட்டதாகவும் புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் எம்ஏசிசி தலைவர் லத்தீபா கோயா தெரிவித்தார் .
இந்த பதிவு பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுவதாகவும், மேலும் இது குறித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல் துறைக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
2016-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியன்று நடந்த முதல் உரையாடலில், சுல்கிப்ளி நஜிப்பை அழைத்து விசாரணை ஆவணங்களில் ஏமாற்றமடைந்ததாகக் கூறுகிறார்.
தாம் இந்த விவகாரத்தில் ஏமாற்றமடைந்ததாக நஜிப் கூறுகிறார். இதனிடையே, (ஜனவரி 7, 2016) அரசாங்க தலைமை வழக்கறிஞரை சந்திக்க இருப்பதாகவும் கூறுகிறார்.
இதனிடையே, 2016-ஆம் ஆண்டு 25-ஆம் தேதி 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி வழக்குகளிலிருந்து நஜிப்பை விடுவிக்க அபாண்டி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
இது முற்றிலும் தவறு என்று லத்தீபா கூறினார். சுல்கிப்ளி அரசாங்க தரப்பாக இருந்து, சந்தேக நபராக இருக்கும், நஜிப்பிடம் தகவல்களை கசியவிட்டுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் மீறல் என்று அவர் கூறினார்.
“அதிகார அத்துமீறல், குற்றவியல் சதி, நீதிக்கு இடையூறு மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைத்தல் உள்ளிட்ட பல தீவிரமான பிரச்சனைகள் இந்த உரையாடல்களின் பதிவிலிருந்து எழுகின்றன.”
“தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு எனது ஊழியர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன், மேலும் அந்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரணைக்கு அனுப்புவோம்” என்று லத்தீபா கூறினார்.