மாஸ்கோ – இரஷிய அரசியல் அமைப்பில் மாபெரும் மாற்றங்கள் செய்யப்போவதாக இரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் நடப்புப் பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ்-வும் மொத்த அமைச்சரவையும் கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) பதவி விலகினர்.
அதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை இரஷியாவின் புதிய பிரதமரை புடின் நியமித்தார். இரஷியாவின் தேசிய வரி இலாகாவின் இயக்குநரான மிகாயில் மிஷூஸ்டின் (படம்) புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இரஷிய அரசியல் அரங்கில் அதிகம் அறியப்படாதவராக மிகாயில் கருதப்படுகிறார்.
எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகிக்கத் தகுதி கொண்ட புடினுக்கு இதுவே இறுதித் தவணையாகும். எனினும், இரஷியாவின் அரசியல் அமைப்பு சட்டங்களைத் திருத்தி, அதன் மூலம் அதிபர் பதவிக்கான தவணைக் கட்டுப்பாடுகளை நீக்கவும் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு அதிபராக இருப்பதற்கும் புடின் முடிவெடுத்துள்ளார் என கருதப்படுகிறது.
இதே போன்ற திருத்தத்தை சீன அதிபர் ஜின் பெங்கும் மேற்கொண்டு தனது அதிபருக்கான பதவிக் காலத்தை அண்மையில் நீட்டித்துக் கொண்டார்.