பிரிட்டன்: மேகன் மார்க்கலின் தந்தை தோமஸ் மார்க்கல் தனது மகள் மற்றும் மருமகனின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம் என்று கூறியுள்ளார்.
மேகன் ஒவ்வொரு பெண்ணின் கனவையும் தூக்கி எறிந்து விட்டதாக, ஓர் ஆவணப்படத்திற்காக சேனல் 5 செய்திக்கு அளித்த பேட்டியில் தோமஸ் கூறினார்.
இனி அத்தம்பதியினர் அரண்மனையின் உயர் பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள் என்றும், தங்கள் சொந்த வாழ்க்கைக்கு தேவையான நிதியைத் தேடிக் கொள்வார்கள் என்றும் அரண்மனை அறிவித்ததன் தொடர்பில் தோமஸின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
ஹேரியும் மேகனும் அவர்களின் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்பினர் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருந்தார்.
“இது மிக நீண்ட காலமாக வாழும் மிகப் பெரிய அரச நிறுவனங்களில் ஒன்றாகும். அவர்கள் அதை அழித்துவிட்டனர்.” என்று தோமஸ் கூறினார்.
இளவரசி ஆவது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும், மேகனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, ஆனால், அவர் அதைத் தூக்கி எறிந்துவிட்டார் என்றும் தோமஸ் கூறினார்.
ஹேரி மற்றும் மேகன் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அரச கடமைகளை விட்டுவிட்டு, நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்புவதாக அறிவித்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கினர்.