கோலாலம்பூர்: ஒழுங்கு முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் இன்று புதன்கிழமை கட்சியின் ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை வழங்கினார்.
இந்த கடிதத்தை சுரைடாவின் அரசியல் செயலாளர் நோர் ஹிஸ்வான் அகமட் இங்குள்ள பிகேஆர் தலைமையகத்தில் மதியம் 12.45 மணிக்கு வழங்கினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சுரைடாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ள வேண்டி உள்ளதாக ஹிஸ்வான் கூறினார்.
“ஜனவரி 15 மற்றும் இன்று, ஒழுங்கு வாரியத்திடமிருந்து ஓர் அறிவிப்பை (காரணக் கடிதம்) பெற்றோம். அந்தக் கடிதத்திற்கு சரியாக 14 நாட்களில் பதிலளித்துள்ளோம்.”
“வாரியம் எழுப்பிய கேள்விகளை ஆராய வேண்டும், எனவே கடிதத்திற்கு பதிலளிக்க நாங்கள் சிறிது நேரம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் குற்றச்சாட்டை ஆராய்ந்த பின்னர் சுரைடாவால் இந்த கடிதம் எழுதப்பட்டது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு, இப்போது பிகேஆர் ஒழுக்காற்று வாரியத் தலைவர் டத்தோ அகமட் காசிமிடம் தாம் ஒப்படைத்துள்ளதாக சுரைடாவுக்கு பதிலாக ஹிஸ்வான் கூறினார்.