கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, தற்போது குறைவான பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால், சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானப் பயணங்களை மதிப்பாய்வு செய்துள்ளன.
மலேசியா ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்), அதன் விமானங்களின் பயண அட்டவணைகளை மறுஆய்வு செய்வதாகவும், கொவிட் -19 பாதிப்பு மூலமாக எழும் அச்சங்கள் காரணமாக தேவையான மாற்றங்களைச் செய்வதாகவும் கூறியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, குறிப்பாக சீனாவிலிருந்து மற்றும் இங்கிருந்து சீனாவிற்குச் செல்லும் சேவைகளை குறைப்பதாக எம்ஏஎஸ் தெரிவித்துள்ளது.
“எனவே நாங்கள் தேவையின் அடிப்படையில் செயல்பாட்டைக் குறைத்து வருகிறோம். இதேபோல், இந்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நிறுவனங்களைப் போலவே, எங்கள் செலவுகளை நிர்வகிக்க நடவடிக்கைகளையும் நாங்கள் தொடங்கினோம்.”
“மலேசியா ஏர்லைன்ஸ் பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சில நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு பயணத்தை ஒத்திவைக்கவோ அல்லது இரத்து செய்யவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ அனுமதிக்கிறது” என்று நேற்று டி ஸ்டார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா போன்ற பிற விமான நிறுவனங்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்கு விமானங்களை முன்பதிவு செய்தவர்களுக்கு கடன் கணக்கு அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளன.
மார்ச் 1-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள “டோக்கியோ மராத்தான் 2020” இரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் ஆசியா மாற்று விருப்பங்களை வழங்கியுள்ளது.
இதற்கிடையில், கொவிட் -19 பயத்தின் மத்தியில் பலவீனமான தேவை காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மற்றும் சில்க் ஏர் ஆகியவை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குவாண்டாஸ் ஏர்வேஸ் லிமிடெட் ஆசியாவில் விமானங்களை குறைத்து, கொவிட் -19 கொரொனாவைரஸ் பாதிப்பால் பயணிகள் குறைந்து வருவதால், ஆட்சேர்ப்பு நடவடிக்கையை முடக்கி உள்ளது.
இது குறைந்தது மே இறுதி வரை நீடித்திருக்கும் என்றும், சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான சேவைகளை பாதிக்கும் என்றும் ஆஸ்திரேலிய விமான நிறுவனமான அது இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.