Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணியா? புதிய அரசாங்கமா?” – சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஜோகூர் சுல்தான் கேள்வி

“நம்பிக்கைக் கூட்டணியா? புதிய அரசாங்கமா?” – சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஜோகூர் சுல்தான் கேள்வி

824
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களை அடுத்து மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமான ஜோகூர் மாநிலத்தில் அதன் சுல்தான் அதிரடியாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 26) ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தனித் தனியாக அரண்மனைக்கு அழைத்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது புதிய மாநில அரசாங்கம் அமைக்கப்பட ஆதரவு தருகிறீர்களா என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் சுமார் ஐந்து நிமிடங்கள் சுல்தானைச் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு சுமுகமாக இருந்ததாகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“சுல்தான் ஒரே கேள்வியைத்தான் கேட்டார். பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியா அல்லது புதிய கூட்டணியா?” என்பதுதான் அந்தக் கேள்வி என ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜசெகவின் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.44 மணிக்கு அரண்மனைக்கு வந்த சுல்தான் மாலை 5.09 வரை அங்கிருந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்த பின்னர் வெளியேறினார்.

ஜோகூர் மாநில நிலைமை என்ன?

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் அம்னோ 14 தொகுதிகளையும், மஇகா 2 தொகுதிகளையும், பாஸ் ஒரு தொகுதியையும் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்தால் மொத்தம் 17 தொகுதிகள் வருகின்றன. பெர்சாத்து கட்சி மட்டும் தனியாக 11 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

பெர்சாத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கினால், தேசிய முன்னணி-பாஸ் கூட்டணிக்கு மொத்தம் 28 தொகுதிகள் கிடைக்கும்.

எஞ்சிய 28 தொகுதிகளை நம்பிக்கைக் கூட்டணி கொண்டிருக்கிறது. இதை அடுத்து இரண்டு தரப்புகளும் தெளிவானப் பெரும்பான்மையின்றி சரிசமமான நிலையில் இருக்கின்றன.

பிகேஆர் கட்சியிலிருந்து ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறி தேசிய முன்னணி ஆதரவு கூட்டணியில் இணைவர் என்ற வதந்திகள் உலவி வரும் நிலையில், புதிய அரசாங்கத்தைத் தங்களால் அமைக்க முடியும் என அம்னோ ஜோகூர் மாநிலத் தலைவர் ஹஸ்னி முகமட் கூறியுள்ளார்.

எனினும் தற்போது புதிய பிரதமரைத் தேர்வு செய்வதிலும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையை அமைப்பதிலும் நீடித்து வரும் இழுபறி நிலை முடிவுக்கு வரும்வரை ஜோகூர் மாநில அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் எந்தத் தரப்பும் முனையாது எனத் தெரிகிறது.

நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த ஜோகூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சப்பியானும் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதில் பெர்சாத்து கட்சியினருடன் அம்னோ இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளார். பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது என்றாலும், மாநில அரசாங்கத்திலிருந்தும் வெளியேறுவதா என்ற முடிவையோ, அல்லது புதிய அரசாங்கத்தை அம்னோவுடன் இணைந்து அமைப்பதா என்ற முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.