கோலாலம்பூர்: வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மலேசியாவில் ஏற்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்த இராணுவம் காவல் துறைக்கு உதவி புரியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நிலைமையை கண்காணிக்க காவல் துறைக்கு இராணுவம் உதவும் என்று இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“ஞாயிற்றுக்கிழமை இராணுவம் அணிதிரட்டப்படும், எனவே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
இராணுவத்தின் உதவியுடன், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு மக்கள் இணங்குவதற்கான நிலை அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
“இராணுவ கட்டளைக்கு மக்கள் தொடர்ந்து கீழ்ப்படிவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து, மக்களின் ஒத்துழைப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. மக்களுக்கு நன்றி கூறுகிறோம்.”
“இருப்பினும், அரசாங்க மற்றும் காவல் துறையினரின் உத்தரவுகளைப் புறக்கணிக்கும் பல சம்பவங்கள் இன்னும் உள்ளன. ஆரம்ப கட்டத்தில், நாங்கள் அறிவுறுத்தினோம், விவேகமான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டன.”
“சமரசம் செய்ய முடியாத ஒரு நிலைக்கு வந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ”என்று அவர் கூறினார்.