Home One Line P1 கொவிட்-19 தாக்கத்தால்தான் மின்னல் செய்திகள் நேரம் குறைப்பு – வானொலி நேயர்களும் தற்காக்கின்றனர்

கொவிட்-19 தாக்கத்தால்தான் மின்னல் செய்திகள் நேரம் குறைப்பு – வானொலி நேயர்களும் தற்காக்கின்றனர்

664
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை (மார்ச் 26) செல்லியலில் இடம் பெற்ற “முக்கியமான காலகட்டத்தில் மின்னல் வானொலியில் செய்தி நேரம் பாதியாகக் குறைப்பு” என்ற தலைப்பிலான கட்டுரை பரவலாக வானொலி நேயர்களை ஈர்த்துள்ளது.

இதன் தொடர்பில் செல்லியலைத் தொடர்பு கொண்ட சில வாசகர்கள் தகவல்களைப் பரப்பும் சேவையில் மின்னல் பண்பலை எப்போதுமே முன்னணி வானொலியாகச் செயல்பட்டு வந்திருக்கிறது என்றும் எனவே செய்தி நேரத்தின் குறைப்பு என்ற ஒரே அம்சத்தை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு மின்னல் பண்பலையைக் குறைகூறுவது நியாயம் ஆகாது என்றும் மின்னல் அலைவரிசையைத் தற்காத்தனர்.

கொவிட்-19 பாதிப்பால்தான் செய்தி நேரம் குறைப்பு

“எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மின்னலில் பணிபுரிகிறார். இன்னொரு நண்பர் ஆர்டிஎம் இலாகாவில் வேறொரு பிரிவில் வேலை செய்கிறார். அவர்கள் மூலமாக நான் அறிந்து கொண்டது என்னவென்றால், வானொலி ஒலிபரப்பும், வானொலி பணியாளர்களும், அறிவிப்பாளர்களும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். ஒரு வேலை நேரத்திற்கு (ஷிப்ட்) ஓர் அறிவிப்பாளர் மட்டுமே பணியாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் இயல்பாகவே, மின்னலின் செய்திப் பிரிவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. செய்திகளின் நேரமும் குறைந்திருக்கிறது. கொவிட்-19 பிரச்சனைக் காலம் முடிவடைந்ததும் மின்னல் செய்திகளின் நேரப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்து கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் எனக்குத் தெரிந்து இது, மின்னல் வானொலி எதிர்நோக்கும் பிரச்சனை மட்டுமல்ல சீன, மலாய், ஆங்கிலப் பிரிவுகளும் இதே பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக ஆங்கிலப் பிரிவில் சில குறிப்பிட்ட நேரத்துக்கான செய்தி அறவே இரத்து செய்யப்பட்டிருக்கிறது என அறிகிறேன்” என, பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர் ஒருவர் தெரிவித்தார்.

“மின்னல் தகவல் சேவைகளை முழுமையாகப் பாருங்கள் – செய்தி நேரத்தை மட்டும் பார்க்காதீர்கள்”

#TamilSchoolmychoice

இன்னொரு வாசகர் நம்மை அழைத்து, மின்னல் தகவல் ஒலிபரப்பு சேவைகளை நாள் முழுக்க ஒலிபரப்பாகும் – அவர்கள் வழங்கும் – தகவல்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே தவிர, வெறும் ஐந்து நிமிட, பத்து நிமிட செய்திகளை வைத்து மட்டுமே அவர்களின் சேவையை எடைபோடுவது தவறான அணுகுமுறை என்றும் தெரிவித்தார்.

“உதாரணமாக, நாள் ஒன்றுக்கு 18 செய்திகளை மின்னலில் அவர்கள் வழங்குகிறார்கள். இது தவிர, நாள் முழுக்க, நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், பாடல்களுக்கு இடையிலும், கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், அரசாங்க அறிவிப்புகளையும் நம்மிடையே பரிமாறிக் கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அண்மையில் கொவிட்-19 தொடர்பில் அரசாங்கம் அறிவித்த வங்கிக் கடன்களுக்கான காலவரை ஒத்தி வைப்பு முடிவு குறித்து நேரடிப் பேட்டிகளின் மூலம் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர் பல்வேறு சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். பல புதிய – பொதுமக்களுக்குத் தேவையான – தகவல்களை கேட்டுக் கொண்டிருந்த வானொலி நேயர்களுக்கு  அந்த அறிவிப்பாளர் நேரடிப் பேட்டிகளின் வழியாக வழங்கினார். எனவே, இதுபோன்ற தகவல் பரிமாற்ற சேவைகளையும் மின்னல் எப்போதும் வழங்கி வந்திருக்கிறது. ஆக, அவர்களின் தகவல் வழங்கும் சேவைகளை நாள் முழுவதுமான ஒலிபரப்புகளின் மூலமாகத்தான் பார்த்து மதிப்பிட வேண்டுமே தவிர, வெறும் ஐந்து நிமிட, பத்து நிமிட செய்திகளை வைத்து மட்டும் நாம் மதிப்பிடக் கூடாது” என அந்த வாசகர் மேலும் சுட்டிக் காட்டினார்.

ஆக, மின்னல் வானொலியின் செய்தி அறிக்கைகள் குறித்த செல்லியல் கட்டுரை, ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பியிருக்கிறது, வானொலி நேயர்களிடையேயும் மற்ற தரப்புகளிடத்திலும் கவன ஈர்ப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதில் நமக்கும் மகிழ்ச்சிதான்!

-இரா.முத்தரசன்