சிங்கப்பூர் – சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பிரபல பேரங்காடியான முஸ்தாபா சென்டரின் கொவிட்-19 பரவியிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக அந்த பேரங்காடி நேற்று நள்ளிரவோடு மூடப்பட்டது.
மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
பல உலக நாடுகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூலம் கொவிட்-19 பரவலை எதிர்த்துப் போராடி வந்தாலும் சிங்கப்பூர் மட்டும் அத்தகைய உத்தரவு எதனையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. எனினும் கடுமையான அமுலாக்கங்களின் மூலம் கொவிட்-19 பரவலுக்கு எதிரானத் தனது போராட்டங்களை சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.
உதாரணமாக, சமூக இடைவெளி அல்லது விலகல் என்று கூறப்படும் நடைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை என்ற சட்டத்தையும் சிங்கப்பூர் அமுலாக்கியிருக்கிறது.
பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வந்ததோடு, திரையரங்குகள், பேரங்காடிகள் போன்றவை மூடப்படவில்லை.
இவ்வளவுக்கிடையிலும், நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) மட்டும் 49 புதிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,049 ஆக உயர்ந்தது.
புதிய பாதிப்புகளில் 41 பேர்களுக்கு உள்ளூரிலேயே கொவிட்-19 பாதிப்பு பீடித்திருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில்லை.
எஞ்சிய எண்மர் வெளிநாடுகளுக்குச் சென்றதன் மூலம் அங்கிருந்து கொவிட்-19 பாதிப்பை இறக்குமதி செய்தவர்கள்.
புதிய பாதிப்புகளில் முஸ்தாபா சென்டர் பேரங்காடி, மேக்ஸ்வெல் எம்ஆர்டி இரயில் நிலையம் அருகிலுள்ள கட்டுமானப் பகுதி, கெப்பல் கப்பல் கட்டுமானப் பகுதி ஆகிய 3 பகுதிகளில் கொவிட்-19 பாதிப்புகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து முஸ்தாபா சென்டர் மூடப்பட்டிருக்கிறது.