பாரிஸ் – நாள்தோறும் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,355 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
உலக நாடுகளில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான மரணங்கள் இது எனக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டும் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்திருக்கின்றனர். மொத்த மரண எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 277,355 என அதிகரித்திருக்கிறது.
பிரான்சைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அந்நாட்டு அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜெர்மனி 91,959 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மரண எண்ணிக்கை 1,277 என்ற நிலையில் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் கொவிட்-19 சந்தேகம் இருந்தாலே உடனடியாக ஜெர்மனியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக, ஆரம்ப நிலையிலேயே, கொவிட்-19 பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொவிட்-19 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதிலும் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,097,909 ஆக பதிவு செய்யப்பட்டு மரண எண்ணிக்கை 59,131 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிக சுகாதார வசதிகள் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில் கொவிட்-19 பாதிப்புகள் குறைவாகப் பதிவு செய்யப்பட்டு, முன்னேறிய ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளில் மிக அதிகமானோர் பாதிக்கப்படுவது மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.