
கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் தொடர் சங்கிலி குறித்த தரவுகளை மலேசிய காவல் துறை பெற்றுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இதில் பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்லீ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தரவுகள் அடிப்படடையில் சுமார் 40,000 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அடையாளம் காண புக்கிட் அமான் தலைவர் டத்தோ ஹுசிர் முகமட் தலைமையிலான குற்றப் புலனாய்வுத் துறை பணிக்குழுவினால் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு வழங்கிய தரவுகளிலிருந்து, கொவிட்-19 பரிசோதனைக்கு செல்ல வேண்டிய சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இருக்கும் பல பகுதிகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
“இங்குள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசூதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 11,000 உறுப்பினர்களை அடையாளம் காண சுகாதார துறைக்கு உதவுவதன் மூலம் தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்.”
“இந்தத் தரவிலிருந்து, நெருக்கமான தொடர்புகள், பயணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோரின் வலையமைப்பை அடையாளம் காண குழு குறிப்பிட்ட முறைகளைச் செம்மைப்படுத்தி, பயன்படுத்தியது,” என்று அவர் புக்கிட் அமானில் பெர்னாமாவிடம் கூறினார்.