நியூயார்க் – அமெரிக்காவையே உலுக்கி வரும் கொவிட்-19 பாதிப்புகளால் பல்வேறு வணிகங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து திணறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரை உரிமையாளராகக் கொண்ட அமேசோன் நிறுவனத்தின் வணிகமோ பன்மடங்காகப் பெருகி வருகிறது.
காரணம் சொல்ல வேண்டியதில்லை.
ஏற்கனவே, இணைய வணிகத்தில் முதன்மை நிறுவனமாகத் திகழ்வது அமேசோன். இப்போதோ அமெரிக்காவும் உலக நாடுகள் பலவும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் முடங்கிக் கிடக்கும் நிலையில், இணைய வணிகத்தின் தேவையும், பயன்பாடும், பன்மடங்காக விரிவாகி வருகிறது.
இதன் காரணமாக, மேலும் 75 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த அமேசோன் திட்டமிட்டுள்ளது.
கொவிட்-19 தொடர்பில் அத்தியாவசியப் பொருட்களுக்கும், உணவுப் பொருட்களுக்கும் மற்ற வகைப் பொருட்களுக்கும் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனது விநியோக மையங்களில் இதுவரையில் 100 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகவும் அமேசோன் தெரிவித்துள்ளது.
புதிய பணியாளர்கள் சேர்க்கை, சம்பள உயர்வுகள் காரணமாக 350 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனத் திட்டமிட்டிருந்த அமேசோன் தற்போது அந்த செலவினம் 500 மில்லியன் டாலர்களாக உயரும் என மதிப்பிடுகிறது.