கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது குற்றமல்ல.
கொவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்க, அறிகுறிகள் உள்ள நபர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியதை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் (கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு) முகக்கவசம் அணியத் தேவையில்லை. அவ்வாறு அணியாதவர்களைத் தடுக்க முடியாது. முன்னதாக, ஒருவர் முகக்கவசம் அணியாததால் பல்பொருள் அங்காடி மேலாளர் மற்றும் அதன் பாதுகாப்புக் காவலர்கள் அந்த வாடிக்கையாளரை சாமான்களை வாங்குவதை தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடு அரசாங்கம் வெளியிட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை வழிகாட்டுதல்களில் இல்லை” என்று அவர் கூறினார்.
“ஒரு நபர் முகக்கவசம் அணியத் தவறினால் அது ஒரு குற்றமல்ல,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.