அவுரங்கபாத் (மகராஷ்டிரா) –இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள அவுரங்கபாத்-ஜால்னா பாதையில் அமைந்திருக்கும் இரயில் தண்டவாளத்தில் களைப்பினால் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு இரயில் ஒன்று ஏறிச் சென்றதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (மே 8) அதிகாலை 6.30 மணியளவில் இந்த உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. இவர்கள் அனைவரும் மாநிலம் விட்டு வேலை செய்யும் குடியேற்றத் தொழிலாளர்கள் ஆவர். தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் நீண்ட பயணக் களைப்பினால் இரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இரயில் தண்டவாளத்தைப் பாதையாகப் பயன்படுத்தித் தங்களின் பயணத்தை மேற்கொண்டிருந்த அவர்கள் ஓரிடத்தில் களைப்புற்று அங்கேயே ஓய்வுக்காக உறங்கியிருக்கின்றனர்.
இரயிலை நிறுத்த ஓட்டுநர் முயற்சிகள் எடுத்தாலும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில் மேலும் ஒருவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியிருக்கிறார்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.
கொவிட்19 தொடர்பில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் குடியேற்றத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தங்க இடம், உண்ண உணவு வசதிகளின்றி பலர் கால்நடையாகவே தங்களின் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகையவர்களின் சிலர்தான் இன்றைய இரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பவர்களாகும்.