இன்று தனது 74-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பாலா. 4 ஜூன் 1946-இல் பிறந்த பாலா, தெலுங்கு பூர்வீகத்தைக் கொண்டவர் என்றாலும், ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களைப் பாடியவர்.
எம்.எஸ்.விஸ்வநாதனால் தமிழ் திரையுலகுக்குக் கொண்டு வரப்பட்டவர். “இயற்கையென்னும் இளைய கன்னி” என்ற சாந்தி நிலையப் படப் பாடலோடு தொடங்கியது அவரது தமிழ் இசைப் பயணம்.
அடிமைப் பெண் படத்தில் எம்ஜிஆருக்காகப் பாடிய “ஆயிரம் நிலவே வா” அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
1976-ஆம் ஆண்டு தொடங்கி இளையராஜாவின் வருகை இசையுலகைப் புரட்டிப் போட்டது என்றால், எஸ்.பி.பாலாவை இன்னொரு பரிமாணத்திற்குக் கொண்டு சென்றது. இளையராஜா இசையமைப்பாளராக வருவதற்கு முன்னால் பாலாவும் அவரும் நெருங்கிப் பழகிய நண்பர்கள். ஒன்றாக மேடைக் கச்சேரி நடத்தியவர்கள்.
அண்மையில்கூட இளையராஜாவின் இசையமைப்பில் இணைந்து கொவிட்-19 முன்னிலைப் பணியாளர்களுக்காக ஒரு தனிப்பாடலைப் பாடியிருக்கிறார் பாலா.
ஒரே துறையில் இயங்கும் மற்றவர்களைப் போட்டியாகக் கருதும் காலம் இது. ஆனால், இன்னொரு பாடகரான கே.ஜே.ஜேசுதாசை தனது மூத்த சகோதரராகவும், குருவாகவும் போற்றி, ஒருமுறை அவருக்கு பாதபூஜையும் செய்த பண்பாளர் எஸ்.பி.பாலா.