ஈப்போ, ஏப்ரல் 12 – பொதுத்தேர்தலில் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில், மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஹீ யிட் பூங் (படம்) தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹீ யிட் கூறுகையில் “தேர்தலில் போட்டியிடாமல், தேசிய முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளேன். ஜெலாபாங் தொகுதியைச் சேர்ந்த மக்கள், அத்தொகுதியில் பிறந்து, வளர்ந்த வேட்பாளரையே விரும்புகின்றனர். எனவே அப்படி ஒரு வேட்பாளரையே தே.மு தலைமையும் தேர்ந்தெடுக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அத்தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவே தான் விரும்புவதாகவும் ஹீ யிட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலில், ஜெலாபாங் தொகுதியில், ஜ.செ.க சார்பாகப் போட்டியிட்டு 6,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹீ யிட், பிறகு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களான ஜாமாலுடின் முகமாட் ரட்ஜி (பேராங் தொகுதி), முகமாட் ஓஸ்மான் முகமாட் ஜைலு (சங்காட் தொகுதி) ஆகியோருடன் கட்சியிலிருந்து விலகி, சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துக்கொண்டார்.