கோலாலம்பூர்: தானா மேரா அம்னோ தொகுதி ஜூன் 16 முதல் கட்சியின் உயர் தலைமையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தத்திற்கு எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இடைநீக்கம் குறித்து முடிவு செய்த அம்னோ உச்சமன்றக் கூட்டம், கிளந்தான் அம்னோ தொடர்புக் குழு பிரிவுக்கு ஒரு தற்காலிக குழுவை அமைக்கும்படி அறிவுறுத்தியது.
இந்த முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தொகுதி செயல் தலைவர் முகமட் அல்மிடி ஜாபர் தெரிவித்தார். இது ஜூன் 17 அன்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
கிளந்தான் அம்னோ தொடர்புத் தலைவர் அகமட் ஜஸ்லான் யாகூப் வாட்சாப் மூலம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“இடைநீக்கத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை குறிப்பிடவில்லை. தொகுதி தலைமையின் மாற்றம் தொடர்பானதாக இருக்கலாம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.