சென்னை: சமீபத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில், தந்தை – மகன் மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டணங்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்த கண்டன போராட்டத்தில் கோலிவுட் நடிகர் நடிகைகளும் இணைந்து கொண்டனர்.
இதனிடையே, இந்த வழக்குத் தொடர்பாக காவல் துறை அதிகாரி ரகு கணேஷ் உட்பட அறுவரை மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
காவல் துறை அதிகாரிகள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்டோர் மீதும் மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
சாத்தான் குளம் சம்பவத்தில் காவல் துறையினர் ஏற்கனவே பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்பட்டு, கொலை வழக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 19-ஆம் தேதி, கைபேசி கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். படு காயங்களுடன் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் ஜூன் 23-ஆம் தேதி உயிரிழந்தனர்.
காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதால் படுகாயம் அடைந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.