Home One Line P1 மலேசியாவில் மின்-வாக்களிப்பு சாத்தியப்படுமா?

மலேசியாவில் மின்-வாக்களிப்பு சாத்தியப்படுமா?

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் மின்-வாக்களிப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகிறது.

பல்வேறு தரப்பினரை அரசாங்கம் தற்போது ஈடுபடுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

தரவு இரகசியத்தன்மை, பாதுகாப்பு, செலவு மற்றும் வாக்காளர் கல்வி தொடர்பான சிக்கல்களை மின்-வாக்களிப்பு உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், மின் வாக்களிப்பு தொடர்பான இரகசியத்தன்மை, பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் திருப்தி அடையவில்லை என்று அமைச்சர் கூறினார்.

“எனவே, எந்தவொரு முடிவும் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படுவதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் உரையாடும்” என்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

தேர்தலை எதிர்கொள்வதில் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதா என்ற, பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மாஹாதிர் காலிட் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பல நாடுகளில் மின்-வாக்களிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த தக்கியுடின், பிரேசில், எஸ்டோனியா, இந்தியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் மின்-வாக்களிப்பு முறைகள் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

இருப்பினும், பல நாடுகள் வழக்கமான காகித வாக்குகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“பல சிக்கல்கள் அவற்றின் தேர்தல் முடிவுகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இது ஒரு பயனுள்ள அமைப்பு அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் வாதிட்டார்.

வாக்களிக்கும் மையங்கள் இல்லாத பகுதிகளில் சில மலேசியர்கள் வசிக்கக்கூடும் என்று பாஹ்மி பாட்சில் (லெம்பா பந்தாய்) குறுக்கிட்டார்.

நாட்டிலும், வெளிநாட்டிலும் தேர்தல் செயல்முறை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தியதாக அவர் கூறினார்.

“ஆயினும்கூட, அவ்வப்போது மேம்பாடுகள் செய்யப்படும். 15- வது பொதுத் தேர்தலில் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளில் மேம்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 15- வது பொதுத் தேர்தலுக்கான வாய்ப்பை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் எப்போதும் தயாராக இருப்பதாக தக்கியுடின் தெரிவித்தார்.

“தேர்தல் ஆணையம் சுமூகமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகள், முகவர் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

தேர்தலுக்கான தயார் நிலையாக, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிக்க இடமளிக்கப்படும். மாவட்டங்களில் கூடுதல் தேர்தல் மையங்களை தேர்தல் ஆணையம் கொண்டிருக்கும் என்று தக்கியுடின் கூறினார்.

தேர்தல் பட்டியலை தேர்தல் ஆணையம் புதுப்பித்து வருகிறது. இறந்த அல்லது மலேசிய குடிமக்களாக இல்லாத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.