ஈப்போ: யூடியூப் பிரபலம் பவித்ராவின் கணவர் சுகு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். அபாயகரமான ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அவர் மீது குற்றம் சட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட எம்.சுகு, 29, நீதிபதி முகமட் பாவ்சி முகமட் நாசிர் முன்னிலையில் தம்மீதான குற்றம் வாசிக்கப்பட்டபோது, அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றச்சாட்டின் படி, கடந்த ஜூலை 21 மாலை 6 மணிக்கு , சுகு, ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையின் பிரசவப் பிரிவு வாகன நிறுத்துமிடத்தில் 66.040 செ.மீ (26 அங்குலங்கள்) அளவிலான ஆபத்தான ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரிக்கும், வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958- இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைகளை கொண்டு வரும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படியும் விதிக்கப்படும்.
முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் முகமட் வாபி இஸ்மாயில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு பிணைத் தொகையையும் பணத்தையும் ஆட்சேபித்தார். இம்மாதிரியான குற்றங்களுக்கு வழக்கமாக பிணை வழங்கப்படுவதில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“மருத்துவமனை ஒரு பாதுகாப்பான இடம். பொது இடங்களில் ஆயுதம் எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைக்கு நோக்கமாக ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது. பிணை கொடுக்க வேண்டுமென்றால் 20,000 ரிங்கிட் கட்டணம் வசூலிக்க விண்ணப்பிக்கிறேன், ” என்று அவர் கூறினார்.
சுகுவைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் மஹிந்தர்ஜித் சிங், அவரது மனைவி எஸ்.பவித்ரா, 28, ஜூலை 22 அன்று சுங்கை செனாம் காவல் நிலையத்தில் அளித்த காவல் துறைப் புகாரை திரும்பப் பெற்றதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க விண்ணப்பித்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு இளம் குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் ஒரு தவறான புரிதலினால் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியும் இன்று நீதிமன்றத்தில் உள்ளார்.”
இருப்பினும், நீதிபதி முகமட் பாவ்சி இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணத்தை கருத்தில் கொண்டு, 10,000 ரிங்கிட் பிணையும் , ஒருவர் உத்தரவாதத்துடன் விடுவிக்கவும் அனுமதித்தார்.
ஆகஸ்ட் 17 மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.