வாஷிங்டன் : முதன் முறையாக வெர்ச்சுவல் (virtual) எனப்படும் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்ட அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 17) 19.7 மில்லியன் மக்கள் 10 தொலைக்காட்சி அலைவரிசைகளின் வழி பார்த்து மகிழ்ந்தனர்.
கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இந்த முறை மாநாடு மெய்நிகர் இயங்கலை மூலம் நடத்தப்பட்டது. தலைவர்களின் முக்கிய உரைகள் அவர்கள் இருந்த இடத்தில் இருந்தே காணொளிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. முன்கூட்டியே இந்த உரைகள் பதிவு செய்யப்பட்டன.
எனினும் 2016-இல் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டை 26 மில்லியன் பேர்கள் பார்த்தனர். அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டுக்கான பார்வையாளர் எண்ணிக்கை குறைவானதே ஆகும்.
இந்த மாநாட்டில் ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 19) நடைபெறும் மாநாட்டில் துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்.
முன்னாள் முதல் பெண்மணி மிச்சல் ஒபாமா, முன்னாள் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் உரையாற்றினர். மிச்சல் ஒபாமாவின் உரை பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை மின்னிலக்க ஊடகங்களின் வழியும், இணையம் வழியும் பார்த்தவர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கவில்லை.
இதற்கிடையில் ஜோ பிடன் பிரச்சாரக் குழுவினர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி மாநாட்டு நிகழ்ச்சிகளை 28.9 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்திருக்கின்றனர். மின்னிலக்க சாளரங்களின் வழி 10.2 மில்லியன் பேர்கள் பார்த்திருக்கின்றனர். இது 2016-இல் மின்னிலக்க சாளரங்களின் வழி பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மில்லியன் அதிகமாகும்.