Home One Line P1 அஸ்மின் அலி- சுரைடா: பெர்சாத்து உச்ச மன்றக் குழுவில் இடம்பெற்றனர்

அஸ்மின் அலி- சுரைடா: பெர்சாத்து உச்ச மன்றக் குழுவில் இடம்பெற்றனர்

519
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் உச்ச மன்றக் குழுவுக்கு முன்னாள் பி.கே.ஆர் தலைவர்கள் முகமட் அஸ்மின் அலி மற்றும் சுரைடா கமாருடின் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இன்று அறிவித்தார்.

கட்சியின் சமீபத்திய தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றிற்கான போட்டியில் தோல்வியடைந்த ரெட்சுவான் யூசோப், பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசினால் உச்ச மன்றக் குழுவுக்கு நியமிக்கப்பட்டார்.

அப்துல் லத்தீப் அகமட், அப்துல் ரஷீத் அசாரி மற்றும் முகமட் பைஸ் நாமான் ஆகியோரும் இந்த நியமனதில் இடம் பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். முகமது சல்லே பஜூரி கட்சி பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

புதிய மாநிலத் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மொகிதின் நியமித்துள்ளார். ஹம்சா பெர்லிஸ் தலைவராகவும், பைசல் அசுமு பகாங் மற்றும் பேராக் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அஸ்மின் அலி மற்றும் தமது குழுவினரும் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக ஆகஸ்டு 22-இல் அறிவித்தனர்.

தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள அனைத்துலக வாணிப, கண்காட்சி மையத்தில் அரசாங்கச் சார்பற்ற இயக்கங்கள் இணைந்து, காங்கிரஸ் நெகாரா என்ற பெயரில் நடத்திய பிரம்மாண்ட கூட்டத்தில் அஸ்மின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் அஸ்மின் உரையாற்றினார். “பெர்லிஸ் முதற்கொண்டு சபா வரையிலான எனது ஆதரவாளர்கள் அனைவரும் பிரதமர் மொகிதின் யாசினின் தலைமைத்துவத்தை ஏற்று இன்று (ஆகஸ்டு 22) முதல் பெர்சாத்து கட்சியில் இணைகிறோம்” என பலத்த கரவொலிக்கிடையில் அவர் அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மொகிதின் யாசினும் கலந்து கொண்டார்.

அஸ்மினின் அறிவிப்புக்குப் பின்னர் அவரது பெர்சாத்து கட்சி உறுப்பினர் அட்டையை மொகிதின் யாசின் அவருக்கு வழங்கினார்.

அஸ்மின் அலியோடு பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறிய மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களும் பெர்சாத்துவில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம் மலாய் கட்சியாக துன் மகாதீரால் தொடங்கப்பட்ட பெர்சாத்து, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடுவதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடக்கியிருக்கிறது.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா ஏற்கனவே பெர்சாத்து கட்சியில் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார்.