Home One Line P1 கொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை!

கொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை!

1656
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நண்பகல் வரைக்குமான 24 மணி நேர கால அவகாசத்தில் மலேசியாவில் 47 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 11) கொவிட்-19 தொற்றுகளின் பாதிப்பு மலேசியாவில் 182 ஆக உயர்ந்து நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஒருநாள் தொற்று சம்பவங்களின் பதிவு இதுவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 8-ஆம் தேதி 100 புதிய தொற்றுகள் ஒரே நாளில் பதிவானது.

நேற்று 58 ஆக இருந்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 47 ஆகக் குறைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும் இன்றைய மொத்த எண்ணிக்கையான 47-இல் 31 சம்பவங்கள் சபாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் சபாவில் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று சபாவில் காணப்பட்ட தொற்றுகளில் 22 சம்பவங்கள் பெந்தெங் எல்டி தொடர்புடையதாகும். இவற்றில் ஒருவர் சுகாதாரப் பணியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெடாவில் மட்டும் 14 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் தாவார் தொற்றுத் திரள் மூலம் 13 பேர்களுக்கு தொற்று பீடிக்கப்பட்டது. ஒருவருக்கு சுங்கை தொற்றுத் திரள் மூலம் தொற்று பீடிக்கப்பட்டது.

இன்றைய தொற்றுகளில் இரண்டு வெளிநாட்டில் இருந்து பீடிக்கப்பட்டதாகும். 47 புதிய தொற்றுகளில் 45 பேர் உள்நாட்டவர்.

தற்போது கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 591 ஆக உயர்ந்துள்ளது.

மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை என்பதும் ஆறுதலான ஓர் அம்சமாகும்.

எனவே, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,915 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,196 ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை வரை கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 591 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 4 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மொத்த தொற்றுகளான 47-இல் உள்ளூரில் தொற்று கண்டவர்கள் 45 பேர். இருவர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்கள். உள்ளூரில் தொற்று கண்ட 45 பேர்களில் 28 பேர் மலேசியர்கள். எஞ்சிய 17 பேர் வெளிநாட்டவர். இந்த 17 வெளிநாட்டவர் அனைவரும் சபாவைச் சேர்ந்தவர்கள்.

28 மலேசியர்களில் 14 பேர் சபாவைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 14 பேர் கெடாவைச் சேர்ந்தவர்கள்.